May 18,2023
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. அதில் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தி அளிக்கிறது . ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பது ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” என்று பதிவிட்டுள்ளார்.