தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

மே.21

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மே. 22-ம் முதல் 24-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே. 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *