மே.21
குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்துவருகிறது. பிரிவு 239ன் கீழ் யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர், ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்வார். அவ்வாறு, அமர்த்தப்படும் ஆளுநர் அமைச்சரவையைச் சார்ந்து இல்லாமல் தன்னிச்சையாக தனது பணிகளை ஆற்றுவார்.
இருப்பினும், டெல்லி தலைநகர மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1991ம் ஆண்டு அரசியமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, டெல்லி தலைநகருக்கு சட்டமன்றப் பேரவை வந்தது. நேரடித் தேர்தல் நடத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை இருக்கவும் இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்தது.
இருந்தபோதும், மாநிலப் பட்டியலில் உள்ள 1, 2, 18 (சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம்)ஆகிய பிரிவுகளின்மீது சட்டங்கள் இயற்ற டெல்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் கிடையாது. இந்த மூன்று பட்டியல்களின் கீழ் சட்டங்கள் இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தரப்பட்டுள்ளது. எனவே கூட்டாட்சி தத்துவத்தின்படி, சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய பொருட்பாடுகளுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர் அமைச்சரவையை சாராது பதவிப் பணிகளை ஆற்ற வேண்டும். இதர அனைத்து விவகாரங்களிலும் அமைச்சரவையின் ஒப்புதலோடு மட்டுமே செயலாற்ற முடியும்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகியவற்றுடன் குடிமைப் பணி சேவைகளையும் துணை நிலை ஆளுநர் பதவிபணிக்குள் கொண்டு வந்தது. பொதுவாக, குடிமைப்பணி நிர்வாகம் என்பது மாநில பட்டியலுக்கு உட்பட்டது.
இது தொடர்பான வழக்கை கடந்த 2019ம் ஆண்டு விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். நீதிபதி ஏ.கே.சிக்ரி, அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் ஏனைய அதிகாரிகள் டெல்லி அரசின் கீழ் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மற்றொரு நீதிபதி அசோக் பூஷன், நிர்வாக சேவைகள் முற்றிலும் டெல்லி அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த முரண்பாடுகளை களைய, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை அளித்தது.
அதில், நீதிபதி அசோக் பூஷன் கருத்தில் உடன்படவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நிலம் ஆகிய விவகாரங்கள் தவிர, அனைத்து குடியுரிமை சேவைகள் மீது சட்டங்கள் இயற்றி செயல்படுத்துவதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த தீர்ப்புக்கு மாறாக மத்திய அரசு தற்போது அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, டெல்லி முதலமைச்சர், தலைமைச் செயலர் (மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படும் அதிகாரி), டெல்லி அரசின் உள்துறைச் செயலர் (துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படுபவர் ) ஆகியோர் அடங்கிய தேசிய தலைநகர் குடிமைப் பணி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசில் பணிபுரியும் குரூப் ‘ஏ’ மற்றும் யூனியன் பிரதேச (DANICS Officers) அதிகாரிகளின் இடமாற்றம், பதவி பொறுப்பு குறித்து இந்த ஆணையம் முடிவெடுக்கும். மேலும், பதவி பொறுப்பு குறித்து ஆணையம் பரிந்துரைத்தாலும், துணை நிலை ஆளுநர் ஒருவேளை அதில் முரண்பட்டால், அவரின் முடிவே மேலோங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.