மே.22
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 8 அமைச்சர்களும் முதல் கட்டமாகப் பதவியேற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பெங்களூரு விதானசவுதாவில் இன்று தொடங்கும் இந்தக் கூட்டமானது வரும் 24ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கான தற்காலிக சபாநாயகராக 9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் 2 நாட்கள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்கவுள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, 3-வது நாளன்று (மே.24) கர்நாடக சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.