மே.25
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது, 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையான குழந்தைகள் இலவசமாக அரசுப்பேருந்துகளில் பயணிக்கும் வகையில், டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.