May 26,2023
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் வழியில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். எனவே பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் மூடப்படாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு உறுப்பு கல்லூரிகள் பொறியியல் பாடங்களை பயிற்றுவித்து வருகின்றன. இவை ஆங்கில மொழியில் மட்டுமின்றி தாய் மொழியான தமிழிலும் கற்பிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருந்து வருகிறது. இது தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்த சூழலில் தான் 11 பொறியியல் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தமிழ் வழியில் கற்பிக்கப்படும் முறை நீக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.
இது மாநில அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. கல்வியாளர்கள் பலரும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர். உடனே அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. ஏன் இப்படி மாற்றி மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்? தாய் மொழிக் கல்விக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புரியவில்லையா?
இல்லை சிலரின் உள்நோக்கத்திற்காக இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? போன்ற கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி, தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது திராவிட மாடல் வழியில் ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம்.
இது அண்ணா, கலைஞர் காலங்களில் இருந்தே எடுக்கப்பட்ட தொடர் முயற்சி. எனவே சிவில் மற்றும் மெக்கானிக்கல் மட்டுமின்றி, பிற பாடப் பிரிவுகளிலும் நடப்பாண்டே தமிழ் வழிக் கல்வியை கொண்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோரை அழைத்து பேசியுள்ளோம்.
இத்தகைய சூழலில் சிவில் மற்றும் மெக்கானிக் பாடங்களை தமிழ் வழியில் கற்பிக்கும் திட்டம் நிறுத்தம் என்பது அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்திருக்கும் முடிவு. இது தவறு என்பதை உணர்ந்து அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா என்னென்ன வேலைகள் செய்தார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. இதுபோன்று அல்லாமல் துணைவேந்தரிடம் சொல்லி அவர் உடனடியாக அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளார். ஆனால் அவர் செய்தது தவறு என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் எனக்கு இல்லை.
எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் புதிய பாடங்களை சேர்ப்பதாக இருந்தாலும், இருக்கிற பாடங்களை எடுப்பதாக இருந்தாலும் அரசின் செயலருக்கு அறிவித்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்ந்து அமலில் இருக்கும். இதனால் தான் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்கு வேண்டும் என்று கேட்கிறோம் என்று அமைச்சர் கே.பொன்முடி தெரிவித்தார்.