மே.27
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்துவதை பள்ளிக்கல்வித்துறை ஒரு மாத காலம் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 1,545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலமாக, தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே, மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர், கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தம் வழங்குவதற்காக இந்தத் திட்டம் ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிகிறது. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்குவர வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.