அரிசி கொம்பன் யானையால் கதவை அடைத்த அமைச்சர்… செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!

May 28, 2023

தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (மே 27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, யானையை பிடிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

அதனைத்தொடர்ந்து, கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.பெரியசாமி கூறுகையில்,”அரிசி கொம்பன் யானை அது இருக்கும் இடத்தில் இருந்து கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்படும். நாளை (அதாவது இன்று) யானையை பிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும். வரும் மே 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

நாளை (அதாவது இன்று) காலை கம்பத்திற்கு வனத்துறை அமைச்சர் வர உள்ளார். பிடிக்கப்படும் யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு யானை பிடிக்கப்படும். கும்கி யானைகள் தற்போது தேனி மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. காலை கம்பம் வந்தடையும். யானை இருக்கும் 100 மீட்டர் தொலைவில் இரண்டு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

மண்டபம் அருகே கொம்பன்

செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்த தனியார் திருமண மண்டபம் அருகே அரிசி கொம்பன் யானை வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால், தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக திருமண மண்டப கதவு பூட்டப்பட்டது. யானை மீண்டும் திரும்பிச் சென்ற பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி திருமண மண்டபத்தில் இருந்து வாகனத்தில் சென்றார்.

ஆட்கொல்லி

கேரளாவில் 10க்கும் மேற்பட்டோரை கொலை செய்து, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மாநில வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டது. இந்த யானையை அரி கொம்பன் என்றும் கேரள பகுதியில் அழைக்கின்றனர்.

ஒருவர் காயம்

யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க யானையின் கழுத்தில் ரேடார் கருவி பொருத்தி தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை குடிபெயர்ந்துள்ளது.

இதையடுத்து, தேனி மாவட்டம் கம்பம் நகரில் அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தை அடுத்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, யானை துரத்தியதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *