May 29, 2023
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதன்படி, பாடப் புத்தக விநியோகத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 4 கோடிக்கும் அதிகமாக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான குடோன்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ஒவ்வொரு பள்ளியாக வந்து மாணவர்களின் விவரங்களை அளித்து போதிய எண்ணிக்கையில் பாடப் புத்தகங்கள் கொண்டு சென்று வருகின்றனர்.
பள்ளி திறக்கப்படும் முதல் நாளே பாடப் புத்தகங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. முன்னதாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை.
வெளியில் சென்றாலே அனல் வாட்டி வதைக்கிறது. சிறிது தூரம் நடந்து சென்றாலே தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது. இது முதியவர்கள், குழந்தைகளுக்கு பெரிதும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பிற்கும் பள்ளிகள் திறப்பை ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பாடப் புத்தகங்களும் அன்றைய தினமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் சென்றடைவதை மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்து வருகின்றனர். 2023-24ஆம் கல்வியாண்டை ஒட்டி தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 4.12 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதில் 3 கோடி பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். எஞ்சிய 1.12 கோடி பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரையில் முதல் பருவ பாடப் புத்தகங்கள் மட்டும் அச்சிடப்பட்டுள்ளன. எஞ்சிய வகுப்புகளுக்கு அனைத்து பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விற்பனைக்கு பாடப் புத்தகங்கள் வாங்குவோர் பள்ளிக் கல்வித்துறையின் டிபிஐ வளாகம், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதலே பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. தற்போது தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான பாடப் புத்தகங்களை உரிய கட்டணம் செலுத்தி பாடநூல் கழக குடோன்களில் இருந்து பெற்று வருகின்றனர். இதுவரை 68 கோடி ரூபாய் மதிப்பிலான பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகள் வாங்கி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் மேற்குறிப்பிட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் வாரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் தயாராக இருக்கின்றன.
சமீபத்தில் தான் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது கவனிக்கத்தக்கது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஷூக்கள், சாக்ஸ்கள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ண பென்சில்கள், கிரையான்கள் ஆகியவை வரும் வாரங்களில் படிப்படியாக விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.