June 04, 23
குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தந்தது. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டெல்லியில் உள்ள அமைச்சர் அமித் ஷா வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக தீவிரமாக கவனம் செலுத்தி உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றிகளை பெற்று தடம் பதித்துள்ளது.
ஆளும் சந்திரசேகர ராவ்வின் பிஆர்எஸ் கட்சிக்கு நாங்கள் தான் மாற்று என்ற கோஷத்தில் வரும் தேர்தலை பாஜக முனைப்புடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவுடனான சந்திப்பில் இந்த கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் அங்கம் வகித்தது. இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில் 2018இல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விலகுவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திர பிரதேசத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று எதிர்ப்பு காட்டி கூட்டணியை முறித்தார் சந்திரபாபு நாயுடு. அதைத் தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்தது. மாநிலத்தின் முதலமைச்சராக ஓய்எஸ்ஆர் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், சமீப நாள்களாக சந்திரபாபு நாயுடு பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி பிரதமர் மோடிக்கு ஆதரவு குரல்களை கொடுத்து வருகிறார். குடியரசு தலைவர் தேர்தலிலும் திரௌபதி முர்முவுக்கு அவரது கட்சி ஆதரவு தந்தது. எனவே, பழைய கூட்டணியை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.