June 05,23
ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசா கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்ததோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இவ்விபத்துக்கு ரயில்வே துறை மற்றும் மத்திய அரசின் அலட்சியப்போக்கே காரணம் என துறைசார் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறினார்.
ரயில்வே வழித்தடங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து தென்கிழக்கு ரயில்வே மண்டல பொது மேலாளர் ரயில்வே அமைச்சகத்து ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிஏஜி அளித்த அறிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தாமல் இருந்திருந்தால் ஒடிசா விபத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் கூறினார்.
இந்த விபத்திற்கு மோடி பொறுப்பேற்பதோடு, ரயில்வே அமைச்சர் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மம்தா பானர்ஜி அமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்தப்பட்ட கவாச் என்கிற கவச பாதுகாப்பு திட்டத்தை நடைமுறை படுத்த ரூ.952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திருமாவளவன் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
ஒடிசா கோர விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறிய அவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் ஏப்ரல் 8-ஆம் தேதி கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசினார். இது தொடர்பாக வழக்கு மட்டும் பதியப்பட்ட நிலையில், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்தார். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற போதும், பாமக நிர்வாகிகள் தனியாருக்கு சொந்தமானது எனக் கூறுவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அறநிலையத்துறையும், காவல் துறையும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதனை கண்டித்து வரும் 9-ஆம் தேதி சென்னையில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
மதுரை சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாதிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாகவும் அரசு எந்த நடவடிக்கை எடுக்காததோடு இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து வரும் 12-ஆம் தேதி மதுரையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.