June 06, 23
தருமபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் கிருஷ்ணன். இவர் தருமபுரி கருவூல காலனியில் வசிக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு காலகட்டதில் இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
அப்போது, பென்னாகரம் ஒன்றிய ஊராட்சிகளில் சுகாதார பணிகளின் தேவைக்காக பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அன்றைய மாவட்ட ஆட்சியர் மலர் விழி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கு தொடர்பாக இன்று (6-ம் தேதி) காலை தருமபுரியில் உள்ள கிருஷ்ணன் வசிக்கும் வீட்டில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.