தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப் படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர் என்றார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத் துணை வேந்தரை தேர்வு செய்ய 2022ம் ஆண்டு அக்டோபரிலேயே குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது; ஆனால் அவர் இதுவரை ஒப்புதல் அளிக்காமலேயே இருக்கிறார் என்றும் பொன்முடி சொன்னார். இந்தக் குழுவில் யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திக்கிறார் என்று தெரிவித்த அமைச்சர் அப்படி ஒரு விதியே இல்லை என்றும் கூறினார். இதன்படி சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட விரும்புகிறாரா? என்பதும் அமைச்சர் பொன்முடியின் கேள்வியாகும்.