திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயலில் ஈடுபட்ட விஜயராகவன் என்பவரிடம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலர்கள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக தமக்கு தரப்பட வேண்டிய ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை விஜயராகவன் பல முறைக்கேட்டும் நகராட்சி நிர்வாகம் கொடுக்க வில்லை. இது குறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனிடம் கேட்ட பொழுது அவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் என்பதும் ஜேசிபி ஓட்டுநரின் குற்றச்சாட்டாகும்.
எப்படியவாது பணத்தை வாங்கிவிட வேண்டம் என்ற எண்ணத்துடன் விஜயராகவன், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவம் என்ற அமைப்பிடம் புகார் கொடுத்து உள்ளார்.
அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆணையர் குமரிக்கண்ணன் உள்நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளதாகவும் விஜயராகவனுக்கு ஜேசிபி இயந்திரத்திற்கான உரிய வாடகை தாமதமாக கொடுக்கப்படுவதால் அதற்குரிய வட்டியும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் குமரிக்கண்ணன் தன்னுடைய பணிகளை முறையாக செய்யவில்லை என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு உள்ளாட்சி மன்ற நடுவம் பரிந்துரை செய்துள்ளது .
இந்த நிலையில் விஜயராகவன் குடும்பத்துடன் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ஜேசிபி இயந்திர வாடகை தொகையை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த டீசலை எடுத்து ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் வந்த நகர் மன்ற தலைவர் பாத்திமா, தற்கொலைக்கு முயன்ற விஜயராகவன் குடும்பத்தினரை அமைதிப் படுத்தினார். பின்னர் பேசிய அவர் ,நகராட்சி ஆணையர் 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை இது பற்றி அவர் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். விஜயராகவனுக்கு உரிய வாடகையை கொடுக்குமாறு பலமுறை சொல்லியும் அவர் தரவில்லை என்றும் நகர் மன்றத் தலைவர் புகார் தெரிவித்தார். இது குறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.