June 08,23
மின் கட்டண உயர்வு இல்லை.. இலவச மின்சாரம் தொடரும்- மின்சார வாரியம் விளக்கம்
வணிக தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டது.
ஆனாலும், மின்வாரியத்திற்கு 1,65,000 கோடி ரூபாய் கடன் இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் வைக்க வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டிற்கு வருடத்திற்கு ஆறு சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான ஒப்புதலையும் வழங்கியது. இந்தநிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை என்றும் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மிக குறைந்த அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமின்றி வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.