June 09, 23
பாஜகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆரம்ப நாட்களில் ராத்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மைத்ரேயன், 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக ஆனார். 1995 முதல் 1997 வரை பாஜகவின் தமிழ்நாடு பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றினார். அதன்பின்னர் 2000-ஆம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கடந்த 23 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்துவந்த மைத்ரேயன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் எங்கிருந்தாலும் வாழ்க எனக் கருத்து பதிவிட்டார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ஒடிசா ரயில் விபத்து மனித உள்ளங்களை உருக்கி, கசக்கி பிழிகிற விபத்தாக தான் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகளை தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஏற்கனவே மேகதாது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டுடைய அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது” என்றார்.