June 12, 23
தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் மத்தியில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்காக செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட முடியுமா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே இருவருக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு திமுகவால் தான் கைநழுவிப் போனது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெறும் என தெரிவித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.