June 13, 23
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர்களை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி அப்போது நடைபெற்ற ஊழலால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், அது தான் ஊழல்களிலேயே முதன்மையானது என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது..
“ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை திட்டமிட்டு ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
முதன்முதலில் பாஜக மத்தியில் ஆட்சியமைக்க அதிமுக தான் காரணமாக இருந்தது. பல தேசிய தலைவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த அளவுக்கு செல்வாக்குள்ள நபராக அவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாஜக மாநிலத் தலைவரின் பேச்சினை அதிமுக வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.