June 13, 23
மயிலாடுதுறையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், டாஸ்மாக் மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு, இரண்டு மது பாட்டில்களை உளவுத்துறை காவல்துறையினரிடம் அளித்ததாகவும் அதை அவர்கள் பெற்று சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். மர்மமான மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டாஸ்மார்க் மதுபானம் அருந்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரண்டு குவாட்டர் பாட்டில்கள்
இது குறித்து உயிரிழந்த பழனி குருநாதனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, சம்பவ இடத்தில் டாஸ்மாக் மதுபான கடையில் விற்கப்படும் இரண்டு குவாட்டர் பாட்டில்கள் இருந்தது. அதில் ஒரு பாட்டில் பாதி சாப்பிட்ட நிலையில் அதன் அருகில் மாம்பழச்சாறு ( Mango frooti ) நிலையில் கிடந்தது.
மர்மமான முறையில் உயிரிழப்பு
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை தாங்கள் சென்று பார்த்த போது அதன் அருகில் இருந்த மதுபான பாட்டில்களை அங்கு வந்த பெரம்பூர் உளவு பிரிவு காவலர் பிரபாகரன் என்பவரிடம் கொடுத்தார். இப்போது காவல்துறையினர் மர்மமான உயிரிழப்பு என்று கூறுகின்றனர். சாராயம் குடித்து சாவு என்பது வெளியே தெரிய வருவதில்லை என குற்றம் சாட்டினர்.
பரபரப்பு
தமிழ்நாட்டில் சாராய சாவுகள் அதிகரித்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தஞ்சாவூரில் மது குடித்து 2 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மயிலாடுதுறையில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவமும் மதுவில் சயனைடு இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.