June 15, 23
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஹாட் நியூஸாக மாறியுள்ளது. தற்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அவருக்கு வரும் 28-ம் தேதி நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் காவலில் எடுக்கப்படலாம் என்கிற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்தற்கான காரணம் குறித்து அமலாக்கத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒருவர், 3.75 ஏக்கர் நிலத்தை வங்கிக்கடன் மூலமாக பெற்றதாகவும், 2016-இல் 9 கோடிக்கு அந்த நிலம் வாங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 25 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை வெறும் ரூ.10.88 லட்சத்துக்கு செந்தில் பாலாஜியின் பினாமிகளுக்கு கைமாறி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியின் பினாமிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குற்றச்சாட்டின் கீழேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.