Junen 15, 23
”நெஞ்சுவலி எனக்கூறியும் அதிகாரிகள் கீழே தள்ளி கைது செய்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையின் நேற்று அதிகாலை 1.39 மணிக்கு கைது செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து, அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காவேரி மருத்துவமனையில் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளையும் ஓமந்தூரர் மருத்துவர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையின் சென்று சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கண்ணதாசன் தெரிவித்ததாவது..
“ அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்தேன் அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை கைது செய்யப்பட்டபோது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு இருக்கக்கூடிய இதய நோய் பற்றியும் என்னிடம் தெரிவித்தார்
மேலும் கைது செய்த் பொழுது தனக்கு தொந்தரவு கொடுத்த அதிகாரிகளின் பெயரை என்னிடம் கூறினார். புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில்தான் நான் இங்கு வந்தேன். இதைப்பற்றி மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் அவரை கடுமையான முறையில் கைது செய்துள்ளனர். அவருக்கு காது அருகே வீக்கம் அதிகமாக உள்ளது. தனக்கு நெஞ்சு வலி எனக் கூறியும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தன்னை கீழே தள்ளி கைது செய்ததாக கூறினார்.” என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.