தீவிரவாதிகளுக்கு சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக புகார்.. விசாரணையில் புதிய தகவல்.

சென்னை மாநகரில் இரண்டு மாதங்களில் இரண்டு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல்கள் பிடிப்பட்டு உள்ளன. இவர்களில் ஒருவர் தீவிரவார இயக்கத்தைச் சோர்ந்தவர். இதனால் தீவிரவாதிகளுக்கும் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்துக் கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் சார்பில் புகார் ஒன்று கடந்த 10- ஆம் தேதி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதை அடுத்த இந்த மெகா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த புகாரில் இலங்கையைச் சேர்ந்த நிரோஷன் என்பவர் போலியாக இந்திய பாஸ்போர்ட் மற்றும் இத்தாலி விசா வைத்திருந்ததாகவும், இதன் மூலம் இத்தாலி செல்ல முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டிருந்ததது. உடனே  நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.. இதனை அடுத்து நிரோஷனை சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

நிரோஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மண்ணடியைச் சேர்ந்த சபிக் அகமது என்பவர் மூன்றரை லட்சம்  ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த பத்தாம் தேதி சபிக் அகமதுவைக் கைது செய்து போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் தாள்கள் எங்கு கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினார்கள். அவர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஐயப்பன் தாங்கலை சேர்ந்த நடராஜ் என்பவர் பாஸ்போர்ட்டின் உள் தாள்கள் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை சப்ளை செய்து வருவதை வெளிப்படுத்தினார்.

இவர்கள் இருவரையும் விசாரணை செய்வதில் தகுதியற்ற பலருக்கும் போலியாக பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்துக் கொடுத்ததை குற்றப்பிரிவு போலிசார் கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் பாஸ்போர்ட் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சபிக் அகமது ஏற்கனவே தேசிய குற்றப்புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது. தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய சபிக் அகமது, ஐய்யப்பன் தாங்கல் நடராஜுடன் கூட்டு சேர்ந்து யார் யாருக்கெல்லாம் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தார் என்ற விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தினார்கள்.

இவர்கள் மீது ஏற்கனவே இரண்டு போலி பாஸ்போர்ட் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களுக்கு போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்தார்களா என்ற கோணத்திலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இன்னொரு கும்பல்.

ஏற்கனவே கடந்த மே மாதம் சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ஷேக் இலியாஸ் என்பவரை பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை போலியாக தயாரித்த குற்றத்தின் பேரில் குற்றப்புலனாய்வு போலிசர் கைது  செய்திருந்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக  திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார், ராயபுரத்தை சேர்ந்த முகமது புகாரி ஆகியோரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களில் அலுவலகம் அமைத்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து கொடுத்த அகமது அலி கான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தங்கள் பிடியில் கொண்டு வந்தனர்.

இந்த அகமது அலி கான் கும்பலுக்கும் சில தினங்கள் முன் பிடிபட்ட சபிக் அகமது கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இப்போது விசாரணையை ஆரம்பித்து உள்ளனர்.

மேலும் தீவிரவாத தொடர்புடைய நபர் போலி பாஸ்போர்ட் தயாரித்து இருப்பதால் தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் இந்த வழக்கு குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.

பல முக்கிய ஆதராங்களை சேகரிக்க வேண்டியிருப்பதால் இந்த இரண்டு கும்பலைச் சேர்ந்த நபர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளர். அதன் பிறகு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *