மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்ட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது சூர்யா மீதான புகாராகும். மேலும் இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில் எழுதினார் என்பதும் குற்றச்சாட்டாகும்.
இது தொடப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசன் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 12- ஆம் தேதி புகார் அளித்து இருந்தார்.
பெண்ணாடம் என்ற பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் அந்த பெண்ணாடம் பேரூராட்சியை மதுரை மாவட்டத்தில் இருப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா குறிப்பிட்டு இருந்தார். அந்த பெண்ணாடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விசுவநாதன் என்பவரால் துப்புரவு தொழிலாளர் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு தொகுதி எம்.பி.என்ற முறையில் சு.வெங்கடேசுனும் மார்க்சிஸ்ட் கட்சியும் எந்த உதவியும் செய்யவில்லை என்பது தான் சூர்யாவின் பதிவாகும்.
இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்துறையினர் சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை நேற்றிரவு கைது செய்தனர்.பின்னர் இரவோடு இரவாக மதுரை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவர், ஜூலை 1- ஆம் தேதி வரை 15-நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் சூர்யா மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
நீதிபதி வீட்டின் முன்பாக சூர்யாவை ஆஜர் படுத்தியபோது ஏராளமான பாஜகவினர் கூடியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆணையர் சூரக்குமரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருந்தனர்.
அவதூறு பரப்பிய வழக்கில் இரண்டு தினங்கள் முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி செல்வ பாலன் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறாக பதிவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே பாஜகவின் முன்னணி நிர்வாகியான சூர்யாவும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வேறு வழக்குகள்.
இதனிடையே முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பியதாக போலிஸ்காரர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்
அவதூறு வழக்கில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டார் என்பது அவர் மீதான வழக்காகும்.
000