June 17, 23
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர்.பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய விஜய், அடுத்து நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்த நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நம் கையை வைத்து நம்மை குத்திக் கொள்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடுவது. ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால், ஒருவர் 15 கோடி செலவு செய்தால், அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
இந்த கல்வி முறையில் நான் கற்றுக் கொடுக்க நினைப்பது, மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
முடிந்த வரை படியுங்கள் அனைத்து தலைவர்கள் கட்சியும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள்.காமராஜர் பற்றியும் படியுங்கள் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள்.
நீங்கள் முதல் தலைமுறை வாக்களார்கள். தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுடன் பேசுங்கள். உடன் இருங்கள். நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் தோல்வி அடைந்த மாணவர்கள் வெற்றி அடைந்தால் அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. தோல்வி அடைந்தவர்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள். அதே போல் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தைரியமாக நீங்கள் நினைப்பதை முன்னெடுத்து செய்யுங்கள், உன்னால் முடியாது என்று சொல்வார்கள், உங்களுக்குள் இருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள் என நடிகர் விஜய் கூறினார்.
இந்நிலையில், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என நடிகர் விஜய் பேசியது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:
நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார் என கூறினார். அதேப்போல, அரசியலுக்கு யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை எனவும் உதயநிதி தெரிவித்தார்.