கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பிளஸ் 2 துணை தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. இந்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.