June 19, 23
வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே சாரல் மழை பெய்தது. நேற்று காலை லேசான மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை மழை நீடித்தது. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை கோடம்பாக்கம் பெரியார் ரோடு , சீராணிபுரம் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன. செங்கல்பட்டு 15 மி.மீ, மதுராந்தகம்-30 மி.மீ , செய்யூர்-29.மி.மீ , தாம்பரம்-68 .மி.மீ, மாமல்லபுரம்-53 மி.மீ , கேளம்பாக்கம்-30 மி.மீ, திருக்கழுக்குன்றம்-25 மி.மீ, திருப்போரூர்-22, மி.மீ மொத்தம்-272 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.