June 19, 23
பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டு வரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சி மாநிலம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.இதனை பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் இந்தியா மட்டுமின்றி ஐநா தலைமையகத்திலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி உரையை கேட்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த மே மாதம் 28-ஆம் தேதி 101வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், வீர் சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், “அவரது தியாகம், தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன… வீர் சாவர்க்கரின் ஆளுமை வலிமை மற்றும் பெருந்தன்மை கொண்டது” என்று உரையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், வரும் 20 முதல் 25ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் முன்கூட்டியே இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிபோர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் பகுதி விரைவில் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பேரிடர் மேலாண்மையில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த மோடி, சத்ரபதி சிவாஜி நீர்மேலாண்மை மற்றும் கடற்படைக்காக செய்த பணிகள் இந்திய வரலாற்றின் பெருமையை இன்றளவும் உயர்த்தியிருப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுடைய மிகப்பெரிய பலமே கடுமையான தருணங்களில் அனைவரும் ஒன்றாக இணைந்து, அதனை சமாளிப்பது தான் என்று கூறிய பிரதமர் மோடி,
ஜூன் 25 ஆம் தேதி நாம் யாரும் மறந்துவிடக்கூடாது, ஏனென்றால் ஜனநாயகத்திற்கு எதிர்மறையான அவசரநிலை பிரகடனம் ஜூன் மாதம் 25ஆம் தேதி தான் அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றில் அது ஒரு கருப்பு காலம் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
மேலும், தற்பொழுது பருவமழை பல்வேறு இடங்களில் தொடங்கிய சூழலில், ஒவ்வொரு துளி மழை நீரையும் நாம் சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார். நடப்பாண்டு யோகா தின கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் “ஒரு குடும்பம் ஒரு உலகம்” என அவர் தெரிவித்தார்.