June 19,2023
1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு மற்றும் அதிகாலையில் வெளுத்து வாங்கியது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கிய சுரங்க நடைபாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளனர். அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நங்கநல்லூர் 39 வது தெருவில் பலத்த காற்று வீசியதில் பழமையான மரம் சாலையில் சரிந்தது. அதிகாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது மரம் சரிந்து விழுந்ததில் லேசான காயத்துடன் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை நூறடி சாலை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தொடர் மழை காரணமாக காலை 6 மணி அளவில் பெட்ரோல் நிலையம் அருகில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் குறுக்கே விழுந்திருந்த மரக்கிளைகளை அகற்றினர். மரம் சாய்ந்த போது வாகனங்களோ, பொது மக்களோ அந்த பகுதியை கடக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெரியார் ரோடு பகுதிகளில் மரக்கிளை முறிந்தும், மரம் சாய்ந்தும் விழுந்ததால் மரங்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
1996ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
பொதுவாக ஜுன் மாதத்தில் அதிக மழை பெய்வது கிடையாது. கடந்த 1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஜூன் மாதத்தில் சுமார் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கடந்த வருடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜூன் மாதத்தில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். அதேபோல 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் 3 மடங்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
-1991 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 184 மி.மீ மழை பதிவானது. -1991 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் 117 மி.மீ, நுங்கம்பாக்கத்தில் 113 மி.மீ மழை பெய்தது.
-1996ஆம் ஆண்டில் ஜூன் 14 ஆம் தேதி சென்னை துறைமுகம் 217,5 மி.மீ சென்னை நுங்கம்பாக்கத்தில் 347.9 மி.மீ மழை பதிவானது.
-1996ஆம் ஆண்டில் ஜூன் 15 ஆம் தேதி சென்னை துறைமுகம் 348.3 மி.மீ சென்னை நுங்கம்பாக்கதில் 193,4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.