சென்னை மாநகரில் இனி மேல் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதே போன்று இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்து வாகனங்கள் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு பதியப்படும்.மோட்டார் வாகன சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஒரு பக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு நவீன தொழில்நுட்பத் திட்டங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 7 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்களை போக்குவரத்து காவல் துறைக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.
இதில் ஸ்பீடு ரேடார் கன் என்ற கருவி சென்னையில் 30 இடங்களில் பொருத்தப்படுகிறது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ANPR கேமரா மூலம் அதிவேக பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு அபராத ரசீது தானாக சென்றுவிடும்.
இது குறித்த விளக்கமளித்த சங்கர் ஜிவால், மோட்டார் வாகனச் சட்டப்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சராசரியாக 40 கி.மீ வேகமும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ வேகமும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். நிர்ணயிக்கப்பட்ட இந்த வேகத்தை கடந்தால் ஸ்பீட் ரேடார் கன் என்னும் இந்த தொழில்நுட்பக் கருவிகள் தானியங்கி முறையில் விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
புதிய முறைபட்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி ஆட்டோ – 25 கி.மீ வேகத்திலும் இலகு ரக வாகனம் எனப்படும் மோட்டார் சைக்கிள்ள், கார்கள் ஆகியவை 40 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.கன ரக வாகனம் லாரிகள் 35 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
இரவு 10 மணி முதல் காலை 7 வரை அதிக பட்சமாக ஆட்டோவின் வேகம் 35 கி.மீ ஆகவும் இலகு ரக வாகனங்களின் வேகம் 50 கி.மீ ஆகவும் கன ரக வாகனங்களின் வேகம் 40 கி.மீ ஆகவும் இருக்கலாம்.
000