அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல் நிலை சரியில்லாததால் அவர் சென்னை காவேரி மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் கலால் (டாஸ்மாக்) ஆகிய இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கடந்த வாரம் மாற்றப் பட்டு விட்டன. இதுவும் கூட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசாணை மூலம் நடை்பெற்றது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்து இருக்கிறார்.பொதுவாக முதலமைச்சர் பரிந்துரை பேரில்தான் அமைச்சர்கள் நீக்கப்படுவது இந்தியாவில் நடந்து வருகிறது. ஆனால் இப்போது முதலமைச்சா மு.க.ஸ்டாலின் பரிந்துரை எதுவும் செய்யாத நிலையில் செந்தில் பாலாஜி மீது ஆளுநர் தன் விருப்பப்படி நடவடிக்கை எடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான வெளிப்படையான மோதலாகும்.
இது பற்றிய அறிக்கையில் ரவி, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு உள்ளார். அவர் அமைச்சாராக நீடிப்பது விசாரணையை பாதிக்கும். மேலும் அரசியல் சாசன இயந்திரமே பழுதானது போன்ற சூழல் ஏற்பட்டு விடும். எனவே தான் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் கூறியிருக்கிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்று அவருடை மனைவி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறையும் கேட்டுக் கொண்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஆளுநர் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை சட்ட ரீதியாக எதிர்க்கொள்வோம் என்ற கூறியுள்ளார். அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதும் முதலமைச்சரின் பதிலாகும்.
கேரளா மாநிலத்தில் சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஒருவர் ஆளுநரால் நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து பினராய் விஜயன் அரசு உயர் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நிதிபதி, அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தது நினைவுகூறத் தக்கது.
000