ஆளுநர் முடிவு நிறுத்திவைப்பு, செந்தில் பாலாஜி பதவி பிழைத்தது.. அடுத்தடுத்த திருப்பங்கள்.

ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல் நிலை சரியில்லாததால் அவர் சென்னை காவேரி மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் கலால் (டாஸ்மாக்) ஆகிய இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கடந்த வாரம்  மாற்றப் பட்டு விட்டன. இதுவும் கூட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசாணை மூலம் நடை்பெற்றது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை ( வியாழக் கிழமை)அறிவித்து இருந்தார்.பொதுவாக முதலமைச்சர் பரிந்துரை பேரில்தான் அமைச்சர்கள்  நீக்கப்படுவது இந்தியாவில் நடந்து வருகிறது. ஆனால் இப்போது முதலமைச்சா மு.க.ஸ்டாலின் பரிந்துரை எதுவும் செய்யாத நிலையில் செந்தில் பாலாஜி மீது ஆளுநர் தன் விருப்பப்படி நடவடிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான வெளிப்படையான மோதலாக கருதப்பட்டது.

இது பற்றிய அறிக்கையில் ரவி, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு இருந்தார். அவர் அமைச்சாராக நீடிப்பது விசாரணையை  பாதிக்கும். மேலும் அரசியல் சாசன இயந்திரமே பழுதானது போன்ற சூழல் ஏற்பட்டு விடும். எனவே தான் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் கூறியிருந்தார்.

இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “ஆளுநருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் இலலை, இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று கருத்து தெரிவித்து இருந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தன.

இந்த பரபரப்பான நிலையில் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக  அறிவித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று இரவு தகவல் வெளியிடப்பட்டது

மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் உத்தரவை பிறப்பித்து விட்டு பிறகு அதனை நிறுத்தி வைக்கும் ஆளுநர் ரவியின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *