திமுக எம்.எல்.ஏ குவாரி உட்பட 12 குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்… மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு…

கரூரில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் பல்வேறு நபர்களுக்கு சொந்தமான 12 கல்குவாரிகளுக்கு ரூபாய் 44 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெயியிட்டு இருக்கிறார்.

கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டாநிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில் இல்லை. குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா? என்பதைக் கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குநர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து 42 குவாரிகளில் கூட்டுப் புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12 இடங்களில் மட்டும் ரூ.44,65,28,357/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 இனங்களுக்கு அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரிக்கு மட்டும் அதிகபட்சமாக 23 கோடியே 54 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *