சொந்த ஊரில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதிப்பதை, வெளிநாடு சென்றால் , சொற்ப ஆண்டுகளில் அள்ளி விடலாம் என்ற கனவில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் விமானம் ஏறி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் ஆண்கள்தான் வெளிநாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். அண்மைக்காலமாக பெண்களும் வெளிநாடுகளுக்கு பறந்த வண்ணம் உள்ளனர்.
வீட்டு வேலைக்கு என அந்நிய தேசங்களுக்கு ,குறிப்பாக அரபு நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படும் பெண்கள், அங்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் இருந்து துபாய் நாட்டுக்கு சென்ற மீனா என்ற பெண், தனக்கு நேரிட்ட கொடுமையை விவரிக்கிறார்:
’வீட்டு வேலை செய்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ,புரோக்கர் ஒருவர் மூலம் துபாய் அனுப்பி வைக்கப்பட்டேன். . நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். எனது விசா காலம் முடிந்து விட்டதால் அந்த வீட்டு உரிமையாளர் என்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இதனை தெரிந்து கொண்ட ஒரு கும்பல் , வேறு வீட்டில் வேலையில் சேர்த்து விடுவதாக கூறினர். இதனை நம்பி சென்ற எனக்கு அதிர்ச்சியே காத்திருந்தது அந்த கும்பல். எனது பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக்கொண்டு ஓர் அறையில் அடைத்து வைத்தனர்.
பாலியல் தொழிலில் என்னை ஈடுபடுத்த அந்த கும்பல் முயற்சித்தது..திருச்சியை சேர்ந்த தன்னார்வலர் மூலம், துபாயில் தங்கி வியாபாரம் செய்யும் அன்வர் அலியை தொடர்பு கொண்டேன். அவர் எனக்கு உதவினார். அங்கு அறக்கட்டளை யும் நடத்தி வரும் அன்வர் அடைக்கலம் கொடுத்தார்.
அவர், சில நாட்களில் விமான டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்த பின்னரே எனக்கு உயிர் வந்தது.’’ என்று சொன்ன மீனாவிடம் இன்னமும் மிரட்சி போகவில்லை.
மீனாவை மீட்ட அன்வர் அலியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வெளியிட்ட தகவல் அதிச்சி ரகம்.
’’அரபு நாடுகளில் ‘வீட்டில் வேலை செய்ய கை நிறைய சம்பளம் தருவார்கள் ’என ஆசை காட்டி போலி ஏஜெண்டுகள் அப்பாவி பெண்களை குறி வைக்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , இந்த புரோக்கர்களின் வலையில் எளிதாக வீழ்ந்து விடுகிறார்கள். அவர்களுக்கான., பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.
அவர்களை அரபு நாடுகளுக்கு அனுப்பி ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்பனை செய்கின்றனர்., அத்தனை சுலபத்தில் அந்த பெண்கள் இந்த நரகத்தில் இருந்து வெளியே வரமுடிவதில்லை . திருச்சி மீனா எனது உதவியை உடனடியாக நாடியதால் தப்பித்து விட்டார். இல்லையென்றால் அவரையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, அடிமையாக விற்று இருப்பார்கள்.’’ என்றார், அன்வர் அலி.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் துபாயில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளதாக சொல்லும் அன்வர் அலி ,. அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் முழு மூச்சாய் இறங்கி இருக்கிறார்.
அன்வர் அலியின் முயற்சி வெற்றி பெற வேண்டும்.