ஜுலை,15-
இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள்.
அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை.
ஒரு சில பாடல்கள் இங்கே.
1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது.
கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா ! பட்டணமா’ படத்தில் பாடல் எழுதினார்.
படத்தில் தீச்சட்டி ஏந்திக்கொண்டு சிவாஜி கணேசன் பாடும்’அம்பிகையே.ஈஸ்வரியே’என்ற பாடலில் அப்போதைய ஆட்சியாளர்களை குத்திக்காட்டியும், காமராஜருக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் அழுத்தமாக சொல்லி இருப்பார் கவியரசர்.
‘ ஏழைகளை ஏச்சதில்லே முத்துமாரி-நாங்க
ஏமாத்திப் பொழச்சதில்லே முத்துமாரி!
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி-இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி!
சிவகாமி உமையவளே முத்துமாரி-உன்
செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி!
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி-இந்த
மக்களெல்லாம் போற்றவேணும் கோட்டை ஏறி!’
என்பது அந்தப்பாடலின் எஞ்சிய வரிகள்.
சிவகாமி என்பது காமராஜரின் தாயார் பெயர்.
நேரடியாகவே இந்தப்பாடல் காமராஜரை குறிப்பிட்டதால், அந்த காலத்தில் திமுகவினர் தங்கள் வீட்டு விஷேசங்களில் இந்த பாடலை ஸ்பீக்கர்களில் ஒலிபரப்ப செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
சிவாஜி காங்கிரஸ்காரர். அவர் காமராஜரை புகழ்வதில் ஆச்சர்யம் இல்லை.ஆனால் பிற்காலத்தில், எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவும் சினிமாவில் காமராஜரை சிலாகித்திருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
கே.பாலாஜி தயாரித்து சிவாஜி-ஜெயலலிதா நடித்தப்படம் ‘நீதி’.1972 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப்படத்தில் காமராஜரை புகழ்ந்தும், அப்போதைய ஆட்சியாளர்களை கிண்டல் செய்தும்’ஓடுது பார் நல்ல படம் ‘ என்ற பாடலை கண்ணதாசன் எழுதி இருப்பார்.பி.சுசீலா பாடிய அந்தப்பாடலில் ஆடி,பாடி நடித்திருப்பார் ஜெயலலிதா.
படத்தில் பயாஸ் கோப் காட்டும் வேடத்தில் நடித்திருக்கும் ஜெயலலிதா’ஓடுது பார் நல்ல படம் ..ஓட்டுவது சின்னப்பொண்ணு என தொடங்கும் பாடலை அபிநயத்தோடு ஆடிப்பாடுவார்.
அந்தப்பாடலில் காமராஜர், சிவாஜி குறித்த வரிகள் உண்டு.பயாஸ்கோப்பில் அவர்கள் போட்டோக்கள் காட்டப்படும்.
’வங்காளத்தில் சேனைபோகும் வேகம் பாருங்க!
இந்திரா காந்தி அங்கே பேசும் மேடை பாருங்க!
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க!
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க!’ என்ற வரிகளை ஜெயலலிதா உச்சரிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கும்.
ரஜினிகாந்தைக்கூட , சினிமாவில் காமராஜர் புகழ் பாட வைத்துள்ளார்,கண்ணதாசன்.
கே.பாலசந்தர் இயக்கிய தில்லுமுல்லு படத்தில் ரஜினிதான் ஹீரோ.
’தங்கங்களே. தம்பிகளே..’எனும் பாடலில் சிவாஜி போல் வேடம்போட்டு அவர் பாடும் பாடலின் வரிகள் இவை:
‘தங்கங்களே!தம்பிகளே!
கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க!
தங்கமகன் காமராஜர் சொன்னபடி
நல்லபடி பூமியிலே வாழுங்க!’
1969 ஆம் ஆண்டு வெளிவந்த ’குருதட்சனை’படம், சிவாஜி -ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம்.
அதில் இடம் பெறும் ‘பாரு பாரு நல்லா பாரு.. பயாஸ்கோப்பு படத்தை பாரு ‘ எனும் பாடலில் காமராஜர்-சிவாஜி ஆகிய இருவரையும் ஒரு சேர புகழ்ந்து கண்ணதாசன் தீட்டிய வரிகள் இவை:
‘நல்லவங்க போக்கப்பாரு!
நாகரிகப் பேச்சைப் பாரு!
அடக்கமான குணத்தைப் பாரு! அவங்க போல
நடக்கணும்னு நினைச்சுப் பாரு!
பாரு பாரு கண்ணாப் பாரு!
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு!
படிக்காத வீரனைப் பாரு!-சிவாஜி
படிச்சுப்புட்டா பேரு பெத்தாரு!’என்பன அந்த வரிகள்.
‘படிக்காத வீரனைப்பாரு’என்ற வரிகள் வரும் போது காமராஜர் போட்டோவும், ’சிவாஜி படிச்சுப்புட்டா பேரு பெத்தாரு’ எனும் வரிகள் வரும்போது சிவாஜி போட்டோவும் திரையில் காட்டப்படும்.
அப்போது திரையரங்குகளில் கரவொலிகள் பேரோசையாய் எழும்.
காமராஜரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய கண்ணதாசன்,அவரிடம் தனிப்பட்ட முறையில் வைக்க வேண்டிய வேண்டுகோளை சினிமா பாடல் ஒன்றில் திணித்து காமராஜர் காதுக்கு கொண்டுபோன கதை தெரியுமா?
பார்ப்போம்.
காமராஜரோடு ,கண்ணதாசன் பிணக்கில் இருந்த நேரம் அது. கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.கட்சியில் என்னை சேர்த்துக்கொள்ளக்கூடாதா? என சினிமா பாடல் மூலம்,காமராஜரிடம் கேட்க முடிவு செய்திருந்த நேரத்தில், தானாகவே அந்த வாய்ப்பு வந்தது.
படம்-பட்டணத்தில் பூதம்.
ஜெய்சங்கர்-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடிக்க ஜாவர் சீதாராமன் பூதமாக நடித்த படம்.
கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் பாடல் அது.
பாடலில் கண்ணதாசன் என்ன எழுதி இருந்தார்?
“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி-என்னை
சேரும் நாள் பார்க்க சொல்லடி!
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!’’
என சிவகாமி மகனான காமராஜருக்கு, கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் படி ‘பாடல் விடு தூது’விடுத்தார், கண்ணதாசன்.
இதனை காமராஜரிடம், காங்கிரஸ் நிர்வாகிகள் எடுத்துச்செல்ல, மீண்டும் கண்ணதாசன், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரசில் இணையும் வாய்ப்பு ஏற்பட்டது.
பெருந்தலைவரும் கவியரசரும் சம காலத்து ஆளுமைகள். நாம் சொன்னது சினிமா பாடல்களில் கண்ணதாசன் சொன்னது மட்டும். முழுமையாக ஆராய்ந்தால் இன்னும் பல புதையல்கள் கிடைக்கும்.
மேதைகளைப் போற்றுவோம்.
000