அதிமுகவைத் தொடர்ந்து பாமகவும் பாஜக திட்டத்திற்கு எதிர்ப்பு.. கூட்டணியில் குழப்பம் வருமா?

ஜுலை,15-

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்ட  ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் பொது சிவில் வேண்டாம் என்று தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டன.

பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் முழு மூச்சாக பாஜக இருந்தாலும் தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் கூட்டணயில் உள்ள அதிமுக இதனை ஏற்றுக் கொள்ளாது என்பதை கடந்த வாரம் தெளிவுப்படுத்தி இருக்கிறது. ஆனால் அந்த கட்சி சார்பில் மத்திய சட்ட ஆணையத்துக்கு பொது சிவில் சட்டத்திற்கு எதிரான அறிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.கடித விவரம் வருமாறு..

“மருத்துவர் ச.இராமதாசு அவர்களால் 16.07.1989-ஆம் நாளில் தமிழ்நாட்டின் தனித்துவ அரசியல் கட்சியாக  பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இதன் நோக்கமே தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்பபடுத்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற தமிழர், மொழி & இன & மதவாரி சிறுபான்மையர் ஆகிய அனைத்து இன மக்களின் உரிமைகள் மற்றும் பெருமைகளை நிலை நிறுத்துவதாகும். எனவே பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த  ஒரு மதத்தினரின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங்கள், மண விலக்குகள், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆகியவை தொடர்பாக தனித்தனியான சிவில் சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப் பட்ட அத்தகைய சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும். பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது.. சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலிலும் இதையே பா.ம.க. வலியுறுத்தியது. இதே நிலைப்பாடு இப்போதும் தொடருகிறது.

மதுவால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கின்றனர். அதனைத் தடுப்பதற்காக மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாத நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்திற்கு மட்டும் இந்திய சட்ட ஆணையம் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதே ஐயங்களை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும்,  வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை  சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது கருத்துரையில் குறிப்பட்டு உள்ளார்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *