ஜுலை, 19-
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் முதலமைச்சரால் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாலை ஆறு மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு டெல்லியில் உள் துறை அமைச்சரிடம் இருந்து வந்த ஆட்சேபனையை அடுத்து டிஸ்மிஸ்சை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.
இது பழைய கதை தான்.
இப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநரால் நீக்க முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
சோதனை விவரம்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் திங்கள் கிழமை காலை 7 மணி அளவில் ஆரம்பமான சோதனை இரவு எட்டு மணி வரை 11 மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது அவருடைய வீட்டில் ரொக்கப்பணமும் வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டன.
பொன்முடி வீடு மட்டுமின்றி அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கொளதம சிகாமணியின் விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
திங்கள் கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. அதன் பிறகு பொன்முடியை அவருடைய காரிலேயே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு பொன்முடியிடம் இரவு 9 மணிக்கு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதை அடுத்து பொன்முடியும், மகன் கௌதம சிகாமணியும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மலை அமலாக்கத் துறை அலுவலகத்தில ஆஜரானார்கள். சுமார் ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு தந்தையும் மகனும் தேவைப்படும் நேரத்தில் கூப்பிட்டால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இரவு 10 மணிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
அறிக்கை.
மேலும் பொன் முடி வீட்டில் நடத்தப் பட்ட சோதனை குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது…
கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர்கள் மற்றும் பினாமிக்கு சட்ட விரோதமாக ஐந்து குவாரிகளில் செம்மண் எடுக்கும் உரிமம் வாங்கி கொடுத்துள்ளார். சட்ட விரோதமான இந்த குவாரிகள் மூலமாக சம்பாதித்த பணத்தை பல்வேறு கணக்குகளில் பரிமாற்றம் செய்திருப்பதும், குறிப்பாக இந்தோனேஷயாவில் உள்ள ஒரு கம்பெனியிலும், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியிலும் பங்குகள் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 2008 -ஆம் ஆண்டு இந்தோனேசியா கம்பெனியில் ரூ 41.57லட்சத்துக்கு வாங்கப்பட்ட பங்குகளை 100 கோடி ரூபாய்க்கு 2022- ஆம் ஆண்டு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் பரிமாற்றம் நிகழ்ந்து உள்ளது.
மேலும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ 81.7 லட்சம் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி சென்னையில் உள்ள பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த பணம் தனது இரண்டாவது மகன் அசோக்கிற்கு சொந்தமான மருத்துவமனைக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். உடனே அந்த மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட போது இந்த பணத்துக்காக சட்டவிரோத ரசீதுகளை தயார் செய்து தாக்கல் செய்ய திட்டமிட்டதை கண்டுபிடித்து தடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான முறையான ஆவணங்கள் அமைச்சர் பொன்முடியிடம் இல்லை.
முறைகேடாக சம்பாதித்த பணத்தை அமைச்சர் பொன்முடி சொத்துக்களிலும், கம்பெனிகளிலும் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பொன்முடிக்கு சொந்தமான 41.9கோடி ரூபாய் வைப்புத் தொகையும் முடக்கப்பட்டு உள்ளது. தொடாந்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இவ்வாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறையின் அறிக்கையை கவனமாக படித்தால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விட பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் கடுமையான உள்ளது தெரியவருகிறது.
ஹவாலா பணப் பறிமாற்றம், வெளிநாட்டில் சட்ட விரோத முதலீடு, வீட்டில் பெட்டி பெட்டியாக இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணம், வங்கிகளில் டெபாசிட் போன்ற புகார்களுக்கு பொன்முடி ஆளாகி உள்ளார். எனவே அப்பாவும் பிள்ளையும் கடுமையான வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
எனவே பொன்முடியை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம், ஆதாரங்களை அழிக்க முயன்றார் என்ற புகாரை சுமத்தி கைது செய்து சிறையில் அடைக்கலாம். அல்லது நேரடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வழக்கு விசாரணயை நடத்தலாம்.
செந்தில்பாலாஜியை பொருத்த வரை ஆளுநரிடம் நேரடியாக மோதியது இல்லை. ஆனால் பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சர் என்பதால் ஆளுநருடன் நேரடி மோதலில் ஈடுபட்டவர். அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர்.
இந்த கோபத்தில் இருக்கும் ஆளுநர் ரவி, ஒரு வேளை பொன்முடி கைது செய்யப்படும் பட்சத்தில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்ககுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற பேச்சு நிலவுகிறது.
பார்க்கலாம்.
0000