ஜுலை,21-
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை.
எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது.
சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன். கட்சியின் பொருளாளர். திமுகவில் இருந்தபோது எம்.ஜி.ஆர்.வகித்த பொறுப்பான பதவி. ஆனால் சீனிவாசனுக்கு பொறுப்பே இருப்பதில்லை.இருந்திருந்தால், முக ஸ்டாலினை முதல்வராக்குவேன் என முழங்கி இருப்பாரா?
விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம்” என உரத்த குரலில் ஓங்கி ஒலிக்க, அருகே நின்ற நிர்வாகிகள் பதறிப்போனார்கள்.
அவர்கள் , சீனிவாசனின் தவறை திருத்த , முதலில் திரு திருவென விழித்த திண்டுக்கல்லார், பின்னர் ஒரு வழியாக சுயநினைவு பெற்றார். “அய்யயோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது. ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம் ’’என சமாளித்தார்.
திண்டுக்கல் சீனிவாசனுக்கு இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை என்பதால், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்.
ஆனால் சமூக வலைத்தளங்கள் சும்மா இருக்குமா?
இதற்கு முந்தைய அவரது பிதற்றல்களை தொகுத்து, தனி புத்தகம் போடும் அளவுக்கு அனைத்து தளங்களிலும் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
அவற்றில் சில சாம்பிள்:
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “நரேந்திர மோடி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருடைய பேரனான ராகுல் காந்தி, மற்றொரு பக்கம் போட்டியிடுகிறார்” என்று புதிய வரலாறு எழுதினார்.
மற்றொரு கூட்டத்தில் இந்தியாவில் பிரதமராக ஆசைப்படுபவர்களின் பட்டியலைச் சொல்லும்போது மம்தா, சரத்பவார் என்று சொல்வதற்கு பதிலாக, ‘மம்தா, சரத்குமார்’ என்றார். அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் , ‘இப்போது சரியாகக் கூறுகிறேன் . சரத்பாபு ’’என்று சொல்ல, ஒட்டு மொத்த கூட்டமும் கலகலப்பானது.
அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ம.க.வை ஆதரித்து கூட்டம் ஒன்றில் பேசிய சீனிவாசன்`ஆப்பிள்’ சின்னத்துக்கு வாக்களியுங்கள்’என கூலாக சொல்ல, ‘’ எங்கள் சின்னம் மாம்பழம்..மாம்பழம்’ பாமகவினர் குரல் கொடுத்தனர்.
திண்டுக்கல் சீனுவாசனுக்கு கூட்டணி சின்னம் ஞாபகம் இல்லாதது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு கூட்டத்தில் தனது சின்னத்தையே மறந்து போன நிகழ்வும் உண்டு. பாஜக வேட்பாளரை ஆதரித்து ஒரு கூட்டத்தில் பேசும்போது“மோடிக்கு இரட்டை இலைச் சின்னத்துல ஓட்டுப் போடுங்க!” என்றுசொல்லி ஜனங்களை மிரள வைத்தார்.
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் சீனிவாசன், “ `நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.’ என்று அந்த காலத்தில் ஔவையார் பாடினார்” என்று சொல்ல, அதிமுக நிர்வாகி ஒருவர் “இதைச் சொன்னது வள்ளுவர்” என்று திருத்தினார்.
ஆனால் இன்று வரை திண்டுக்கல் சீனிவாசன் திருந்தவே இல்லை.
அவரின் அடுத்த முழக்கத்தை கேட்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
000