மணிப்பூரில் மேலும் பலர் பலாத்காரம் ! திடுக்கிடும் தகவல் !

ஜலை, 22 –

மணிப்பூர் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதமுள்ள மெய்தி இன மக்கள் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.

குகி மற்றும் நாகா இனத்தவர் மலைப்பகுதியில் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவர்கள்.மக்கள் தொகையில் இவர்கள் 40 சதவீதம். குகி மற்றும் நாகா சமூகத்தினர் பழங்குடி இன மக்களுக்கான சலுகைளை அனுபவித்து வருகிறார்கள்.

தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என மெய்தி இனத்தவர் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் குகி மற்றும் நாகா சமூகத்தினர் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.அப்போது அவர்களுக்கும், குகி, நாகா மக்களுக்கும் இடையே மோதல் மூண்டு கலவரமாக மாறியது. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரத்தில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாநிலமே பற்றி எரியும் சூழலில் மூன்று தினங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்று நாட்டையே உலுக்கியுள்ளது. பழங்குடியின பெண்கள் இருவர்,மெய்தி கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் வீடியோவே அது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:

மே மாதம் 4- ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் உள்ள  கிராமத்துக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கும்பல் நுழைந்தது.வீடு வீடாக சென்று தீ வைத்தனர். பெண்களை பலாத்காரம் செய்து அவர்கள் தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டனர். அப்போது தனது சகோதரியை காப்பாற்றச்சென்ற இளைஞர் ஒருவரை அந்தப் கும்பல் கொலை செய்துள்ளனர்.அதன்பின், இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி,ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீஸ் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அழைத்துச்செல்லப்படும் வீடியோ, நாட்டில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,மேலும் பல பாலியல் சம்பவங்கள் மணிப்பூரில் அரங்கேறியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மே மாதம் 6- ஆம் தேதி தலைநகரான இம்பால் நகரத்தில் 45 வயது பெண் துகிலுரியப்பட்டு , உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான போட்டோ சமூக வலைத்தளங்களில் நேற்று முன்தினம் வெளியானது.

இதையடுத்து குகி சமூகத்தை சேர்ந்த மணிப்பூர் மாநில எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

கலவரம் ஆரம்பித்த மே 3- ஆம் தேதிக்கு பிறகு, குகி இனத்தை சேர்ந்த மேலும் பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலைகளும் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரை கூறியுள்ள 10 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *