பெரிய நடிகர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ ஏதாவது ஒரு பட்டத்தை தங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு, அவர்களின் தீவிர ரசிகர்கள் சூட்டி அழகு பார்ப்பது தமிழ் சினிமாவின் இலக்கணமாகி விட்டது.சில நேரங்களில் நடிகர்களால் லாபம் பார்த்த விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ ஒரு ( தம்)பட்டத்தை, நடிகர்கள் தலையில் வைத்து விடுவார்கள்.
மக்கள் திலகம், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார்,உலகநாயகன், புரட்சி கலைஞர்,புரட்சி தமிழன், சுப்ரீம் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்கள் இப்படித்தான் சம்மந்தபட்ட நடிகர்களுக்கு வந்து சேர்ந்தன. எந்த ஒரு பல்கலைகழகமும் கொடுக்க வில்லை .
தமிழ் சினிமாவில் இன்று எதிரும், புதிருமாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோருக்கும் அவர்கள் ரசிகர்கள் பட்டம் அளித்துள்ளனர். ஆரம்பத்தில் விஜய் ‘இளைய தளபதி’ என அழைக்கப்பட்டார், இப்போது ‘தளபதி’ என மாற்றி விட்டார்கள். தல, அல்டிமேட் ஸ்டார் என அஜித்துக்கு ரெண்டு பட்டப்பெயர்கள் உண்டு.
ஊடக வெளிச்சத்தை விரும்பாத அஜித், சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் ‘என்னை தல என்றோ, அல்டிமேட் ஸ்டார் என்றோ , அழைக்க வேண்டாம்- அஜித் அல்லது ஏ.கே. ( அஜித்குமார்) என அழைத்தால் போதும்’ என கறாராக தெரிவித்தார்.ஆனாலும் ரசிகர் பட்டாளம் கேட்டதாக தெரியவில்லை.
இப்போது விஜய் விஷயத்துக்கு வருவோம்.
அரசியலில் ஈடுபடும் திட்டத்தில் உள்ள விஜய், தனது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மைக்கில் பேசும்போது, ‘நாங்கள் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுதான். விஜய்யை நாங்கள் நேரில் சந்திக்க விரும்புகிறோம்-அவர் உங்களுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கலாம்– எங்களுக்கு அவர் என்றைக்குமே உடன்பிறவா சகோதரர்- நான் சிறுவயதில் இருந்தே விஜய் ரசிகை’ என்று தெரிவித்தார்.
அப்போது அந்த பெண்ணின் பேச்சை இருண்ட முகத்துடன் இடைமறித்த புஸ்ஸி ஆனந்த், ‘தலைவனின் பெயரை எப்போதுமே சொல்லக் கூடாது-‘தளபதி’ என்றுதான் சொல்லவேண்டும்” என்று உத்தரவு போட்டார். விஜயை நேரில் பார்க்க ஆசைப்பட்ட பெண் அரண்டு போனார்.
விஜய் சொல்லாமல் இப்படி எல்லாம் நடக்குமா என்ன?
-பாரதி.