உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில் அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது.
இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து சோதனை ஆரம்பமாகி உள்ளது அவருடைய மூத்த மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். விழுப்புரத்தில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.அடுத்த மகன் தமிழ்நாடு கிரிக்கெட் போர்டின் தலைவராக செயல்படுகிறார். இவர்களுக்கு விழுப்புரத்தில் சூர்யா என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில கடந்த 13- ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் கைது செய்யப்பட்ட அவர் இன்று வரை நீதிமன்றக் காவலில் தான் உள்ளார். அது பற்றிய பரபரப்பு அடங்குவதற்கு முன்பு பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனையில் இறங்கி இருக்கிறது.
பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூரில் இன்று நடை பெற உள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அதற்கு முன்பே பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
000