இந்தியாவில் கோ ஃபர்ஸ்ட் என்ற விமான நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தனது சேவையை திடீரென நிறுத்தி கொண்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிதிநெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் திவாலாகி விடும். இந்த செய்தி தான் தேசிய அளவில் கடந்த 24 மணி நேரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதன் விளைவாக மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளும் ரத்து. ஸ்ரீநகரில் இருந்து மும்பைக்கும், டெல்லியில் இருந்து மும்பைக்கும் சென்று கொண்டிருந்த விமானங்கள் திடீரென பாதி வழியில் சூரத் நகரில் தரையிறக்கம். இவ்வாறு அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பாதி வழியில் இறங்கி வேறு விமானங்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு உரிய பணம் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பின்னணியை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் குறைந்த விலையில் விமான சேவையை வழங்கி வந்த நிறுவனங்களில் ஒன்றாக கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் (Go First Airlines) திகழ்ந்தது.
இது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 2005ஆம் ஆண்டு தனது சேவையை தொடங்கிய நிலையில் 10 ஆண்டுகளில் நாட்டின் 5வது மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக வளர்ந்தது. 2020ஆம் ஆண்டு காலகட்டத்தில் வளர்ச்சி சிறப்பான முறையில் இருந்தது. 9 வெளிநாட்டு விமானங்கள், 27 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 36 நகரங்களுக்கு தினசரி 330 விமான சேவையை வழங்கி வந்தது. தனது வருவாயை 36 பில்லியனாக பெருக்கும் வகையில் IPO மூலம் பங்குச்சந்தையில் களமிறங்க திட்டமிட்டது.
ஆனால் மே 2, 2023ல் நடந்த சம்பவம் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இரண்டு நாட்களுக்கு தன்னுடைய அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பான தகவல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானங்களுக்கு தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபற்றி விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன் பின்னணி காரணம் குறித்து விசாரிக்கையில், கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிராட் மற்றும் விட்னி நிறுவனத்திடம் இருந்து விமானத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறது. குறிப்பாக விமான எஞ்சின்கள் மேற்குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து தான் பெறப்படுகிறது. இந்நிலையில் எஞ்சின்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தனது சேவையை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
தற்போதைய சூழலில் 28 விமானங்கள் இயக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் வருமானம் பாதிப்பு, நிதி நெருக்கடி என அடுத்தடுத்து சிக்கல்கள் வரத் தொடங்கின. உடனே தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்திற்கன நோட்டீசை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் விளக்கம், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு என பலகட்ட போராட்டங்களுக்கு கோ ஃபர்ஸ்ட் தயாராகி உள்ளது.