பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்.மகாத்மா காந்தி பிறந்த பூமியும் அதுவே.இங்கு மதுவிலக்கு அமலில் உள்ளது.மது அருந்தினாலோ, கள்ளச்சந்தையில் மது விற்றாலோ கம்பி எண்ண வேண்டும்.ஆனாலும் அந்த மாநிலத்தில் ’கள்ள சரக்கு’ கரை புரண்டு ஓடுகிறது.
குஜராத்தில் மது குடிப்பதற்கு 40 ஆயிரம் பேர் பெர்மிட் வைத்துள்ளனர்.மது அருந்தாமல் இருந்தால், உடல்நலம் மோசமாகி விடும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதால், அரசாங்கம் இவர்களுக்கு பெர்மிட் வழங்கியுள்ளது.ஆயினும்பெர்மிட் இல்லாமல் குடிப்போர் பல ஆயிரம் பேர்.
இதனால் பக்கத்து மாநிலங்களில் இருந்து வெளிநாட்டு மதுபானம், சாராயம் போன்றவை கடத்தப்பட்டு குஜராத்தில் விற்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட 212 கோடி ரூபாய் மதிப்பிலான மது பான பாட்டில்களை குஜராத் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இவை போலீஸ்நிலையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்படும்.பல சந்தர்ப்பங்களில், வேலியே பயிரை மேய்வது போல், சரக்கை போலீசாரே, களவாடி பிளாக்கில் விற்கிறார்கள்.பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள்அங்குள்ள பிப்லோட் போலீஸ் ஸ்டேஷனில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது.அவற்றில் 23 பெட்டிகள் அண்மையில் காணாமல் போனது.
விசாரணையில் அந்த போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் துணையோடு ,மது பாட்டில்கள் களவாடப்பட்டு கடத்தப்பட்டது தெரிய வந்தது.போலீஸ்காரர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து,திருடப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காந்தி தேசத்தில், காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை.
-பாரதி.