ஜுலை,30-
இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு எனும் பெயரில் சின்ன பொறியாக மணிப்பூரில் ஆரம்பித்த போராட்டம் இன்று மதச்சண்டையாக மாறி, அந்த மாநிலத்தை மரணக்குழிக்குள் தள்ளி விட்டுள்ளது.
இந்த மத வெறியர்களின் செவிட்டில் ஓங்கி அறைவது போல் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம், சமூக நல்லிணக்கத்தின் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.
கொல்லம் அருகேயுள்ள குக்கிராமம் ஈழவரம் குழி.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் மாமன் -மச்சானாக உறவு முறை சொல்லி அழைத்து நட்பை பேணும் கடவுளின் பூமி.ரம்ஜான்,முகரம் போன்ற நிகழ்வுகளுக்கு , இங்குள்ள இந்துக்கள், பணம் வசூலித்து, முஸ்லிம்களுக்கு உடை, இனிப்பு வழங்கி மகிழ்வார்கள். தீபாவளி , கோயில் திருவிழா போன்ற இந்து பண்டிகைகளுக்கு , முஸ்லிம்கள் காசு வசூலித்து, இரு தரப்புமாக சேர்ந்து கொண்டாடுவார்கள்.மதத்தால் இரண்டு பட்டிருந்தாலும் மனதால் ஒன்று பட்டிருப்பவர்கள், இந்த ஊர்க்காரர்கள்.
வெளியூர் மக்களை வரவேற்க இந்த ஊரில் வளைவு ( ஆர்ச்) ஒன்று உள்ளது. முகைதீன் ஆண்டவர் அடையாளத்தையும், மகாதேவர் கோயில் இலச்சினையையும் இணைத்து இந்த ஆர்ச் உருவாக்கப்பட்டுள்ளது. வளைவின் ஒரு புற தூணில் கோயில் ஜாதகமும், மற்றொரு தூணில் மசூதியின் வரலாறும் பொறிக்கப்பட்டுள்ளது.
இது போன்றே இரு வழிபாட்டு தலங்களுக்கான உண்டியலும் ஒரே குடையின் கீழ்தான் உள்ளது. இஸ்லாமிய சகோதரனும்,இந்து உடன்பிறப்பும் தோளோடு தோள் தொட்டு நிற்பது போல் ,காணிக்கை பெட்டிகளின் மேல்பாகம் இரு மதங்களின் அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கான உண்டியலில் இந்துக்களும்,இந்துக்களூக்கான உண்டியலில் முஸ்லிம்களும் காணிக்கை செலுத்துவது கண்கொள்ளா காட்சியாகும்.
கடவுளின் தேசத்தில், ஒரு குட்டி ‘பாரதவிலாஸ்’.
000