ஜுலை, 23-
தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த்.
சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார்.
அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர், தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’ எனும் கட்சியை 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.
அடுத்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனித்து களம் இறங்கினார்.போணியாகவில்லை. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.தேறவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பாஜக வேட்பாளரிடம் 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அப்போதே தனித்து நிற்பது தற்கொலைக்கு சமமானது என்ற முடிவுக்கு வந்து விட்டார், கமல்.
பாஜக கொள்கைகளில் அவருக்கு ஈர்ப்பு கிடையாது என்பதால், மக்களவை தேர்தல் நெருக்கத்தில்,காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி பக்கமே செல்வார் என அரசியல் ஆர்வலர்கள் கணித்தனர். அதற்கேற்ற வகையிலேயே காய் நகர்த்தி வந்தார், உலகநாயகன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டதுடன் அவருடன் கமல் நீண்டநேரம் ஆலோசனையும் நடத்தினார்.
மக்களவை தேர்தலுக்கு 9 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் வி்யூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டன. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் இருந்து சின்னஞ்சிறு கட்சிளையும் , இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைத்திருந்தது. அந்த கட்சிகளை விட, கூடுதல் ஓட்டு வங்கியை வைத்திருக்கும் கமல்ஹாசன் அழைக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் தான் ,எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டது.
தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் நடந்த போது கமலிடம் பெரிதாக படங்கள் இல்லை. ஆனால் விக்ரம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன நிலையில் அவர் மிகவும் பிஸியாகி விட்டார்.
இந்தியன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.அடுத்து ’பான் இந்தியா’ படமான ’கல்கி 2898’ படத்துக்கு கால்ஷீட் அளித்துள்ளார். இதனை முடித்து விட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே பிக்பாஸ் அடுத்த சீசன் வேலைகளும் உள்ளது.தனது வாழ்நாளிலேயே கமல் இப்போது தான் நாலு காசு பார்த்து வருகிறார்.
பிசியாக இருப்பதால், கமலை பெங்களூரு கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைக்கவில்லையா? வேறு காரணம் ஏதும் உண்டா? என தெரியவில்லை. ’பாஜகவுக்கு மட்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடை த்திருந்தால், கமலை வெற்றிலை-பாக்கு வைத்து கூப்பிட்டிருப்பார்கள்’ என்றார் மக்கள் நீதி மைய்யம் நிர்வாகி ஒருவர்.
பெரிதாக செல்வாக்கு இல்லாத தெலுங்கு நடிகர் பவண் கல்யாணையே, மோடி தலைமை ஏற்ற டெல்லி கூட்டத்துக்கு பாஜகவினர் அழைத்து சென்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
’ இந்தியா’வுடன் கமல் கூட்டணி வைப்பரா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
000