தமிழ் சினிமாவில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரும் ஜாம்பவான்கள் இருந்தார்கள்.
ஹீரோக்கள் கைக்கு தமிழ் சினிமா சென்றபின், அவர்கள் தங்கள் நிறுவனங்களை மூடி விட்டனர். அவற்றில் ஜெமினி,வி ஜய –வாகினி, ஏவி.எம்.சத்யா மூவீஸ்., சிவாஜி பிலிம்ஸ், தேவர் பிலிம்ஸ் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.
இப்போது சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ், உள்ளிட்ட நாலைந்து நிறுவனங்களே தொடர்ச்சியாக படம் தயாரிக்கிறார்கள். அவர்களும் உச்ச நட்சத்திரங்கள் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள்
இப்படி உச்ச நட்சத்திரங்களை நம்பி படம் தயாரித்து, இன்றைக்கு நொடிந்து போயுள்ள நிறுவனம் ‘லைகா’. ஒரு காலத்தில் வெற்றி படங்களை தந்த ‘லைகா’இப்போது அடிமேல் அடி வாங்கி வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இந்த நிறுவனம் தயாரித்தது.அதில் லாபம் எடுத்தார்கள்.அதன் பிறகு தயாரித்த அத்தனை படங்களும் ‘பிளாப்’.
‘லைகா’வின் தொடர் தோல்விகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் வடிவேலு , நாயகனாக நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.
தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட் கார்டு’ போட்டதால்,10 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்த வடிவேலுவை மீண்டும் ‘லைகா’ தான் மீட்டது.
வடிவேலு மீது புகார் சொன்ன இயக்குநர் ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் ‘செட்டில்’செய்து.நாய் சேகரில் நடிக்க வைத்தது, அந்த நிறுவனம்.
படம் படு தோல்வி.
சந்திரமுகி -2, லால் சலாம், இந்தியன் -2 என லைகா எடுத்த அத்தனை படங்களும் வரிசையாக ஊத்தி மூடிக்கொண்டது.
இந்த நிறுவனத்தின் கடைசி நம்பிக்கையாக இருந்த இரண்டு படங்கள்-
ரஜினியின் ‘வேட்டையன்’.
அஜித்தின் ‘விடாமுயற்சி’.
கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று.
ரஜினி படமும் போகவில்லை.
அஜித்,படமும் தேறவில்லை.
‘லைகா’ நிறுவனர் சுபாஷ்கரன், லண்டனில் குடிபுகுந்துள்ள இலங்கை தமிழர்.
அவர் செய்யும் பல தொழில்களில் சினிமாவும் ஒன்று.கோடிகள் அவருக்கு பொருட்டல்ல. ஆனாலும்கொஞ்சமாவது , லாபம் வந்தால் தானே எந்த ஒரு தொழிலிலும் ஒருவர் ஈடுபட முடியும்.
தொடர் நஷ்டங்களை சந்தித்துள்ள ‘லைகா’ தொடர்ந்து சினிமாவில் இருப்பார்களா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
—