ஜுலை,22-
எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் வெளியாகி இன்றுடன் ( ஜுலை 22 ) 69 ஆண்டுகள் ஆகிறது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுதிய கதைக்கு திரைக்கதை தீட்டி வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கு முதல் மரியாதை கொடுத்த முதல்படம் இது.
‘மலைக்கள்ளன்’ என டைட்டில் கார்டு போடும் போது, அதன் கீழேயே ‘நாமக்கல் கவிஞர் இயற்றியது’ என்ற கார்டையும் காட்டுவார்கள். சினிமாவில் ஹீரோ பெயருக்கு முன்பாக கதாசிரியர் பெயரை டைட்டிலில் காட்டிய ஒரே படமும் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.
எம்.ஜி.ஆரை ஆக்ஷன் கதாநாயகனாக உருவெடுத்த முதல் படம் மலைக்கள்ளன். பணக்காரர்களிடம் இருந்து பணம் பறித்து ஏழைகளுக்கு அள்ளி வீசும், ராபின் ஹூட் கதை. பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ஸ்ரீராமுலு நாயுடு இயக்கினார்.
காடு, மலைகள், கிராமங்கள் எல்லாவற்றையும் பிரமாண்ட அரங்கம் அமைத்து படம் பிடித்தனர். மலைகளை இணைக்கும் விஞ்சில் நடைபெறும் சண்டை காட்சி பொதுமக்களை பிரமிக்க வைத்தது.இதனால் படத்தை திரும்ப திரும்ப பார்த்து 150 நாள் ஓட வைத்தார்கள். அந்த காலத்திலேயே 90 லட்சம் ரூபாய் வசூலித்தது.
தமிழ் மலைக்கள்ளனுக்கு கிடைத்த வரவேற்பால், இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதனை இயக்கினார் ஸ்ரீராமுலு நாயுடு.அனைத்து ஏரியாக்களிலும் ஹிட் அடித்தது.
அந்த காலத்தில் ஜெமினியின் சந்திரலேகா படம் தான், பிரமாண்ட படைப்பாக கருதப்பட்டது.அதற்கு நிகராக இந்தப்பட உருவாக்கப்பட்டிருந்தது. முதன் முறையாக தேசிய விருது பெற்ற தமிழ் படம் எனும் பெருமையும் மலைக்கள்ளனுக்கு உண்டு.
‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’என்பன போன்ற அருமையான பாடல்களும், படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கிராமங்கள் வரை எம்.ஜி.ஆரை கொண்டு போய் சேர்த்த இந்த படமே, மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் அவரை பதிய வைத்த முதல் படம்.
இந்த படத்துக்கு பிறகு எம்.ஜி.ஆர்.உருவாக்கிகொண்ட ஃபார்முலா, அவரது கடைசி படம் வரை நீடித்தது.
மலைக்கள்ளனாக முதலில் சிவாஜியை நடிக்க வைக்கவே தயாரிப்பாளர் தீர்மானித்தார்.சிவாஜி கைவசம் அப்போது, சில படங்கள் இருந்ததால் பின்னர், எம்.ஜி.ஆர்.ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் தலைமறை கடந்து நிற்கும் படங்களில் மலைக்கள்ளனும் ஒன்று என்று பெருமையாகச் சொல்லலாம்.
உண்மைதான்.
0000