ஜுலை,23-
மணிப்பூரில் இருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி மேல் அதிர்சியை ஏற்படுத்துகின்றன.
நிர்வாண ஊர்வலம்,பாலியல் பலாத்காரம் போன்ற பேரிடிச் செய்திகள் நடுவே தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் படித்த குக்கி சமூகத்து மாணவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து கண்ணீரை வரழைக்கிறது.
மே மாதம் 3 – ஆம் தேதி கலவரம் மூண்டது. அதற்கு மறுநாள் இரவு.. பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி செய்யும் மாணவிகள் அறையை மொய்தி சமூகத்து வன்முறைக் கும்பல் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் தடிகளையும் கத்திகளையும் காட்டி மிரட்டி, “சிடா குகி நுபி லீப்ரா?” என முழக்கங்களை எழுப்பினார்கள். (இங்கு குக்கி பெண் யாராவது இருக்கிறார்களா?).பிறக “குகி நுபி ஹட்லோ” (குகி பெண்களைக் கொல்ல வேண்டும் ) என்று கத்தியிருக்கிறார்கள்.
உடனே பயந்து போன மாணவிகள் தங்களுடன் இருந்த குக்கி சமூகத்து மாணவியை அழைத்துக் கொண்டு கழிறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்கள். நான்கைந்து மணி நேரம் அந்த கழிவறையில் அந்த பெண்கள் மூச்சு முட்டப் பயத்தோடு கிடந்தனர்.
வன்முறைக் கும்பல் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கழிவறைக் கதவை தட்டியது. மாணவிகள் திறக்க வில்லை. வெறிக்கொண்ட கூட்டம் கதவை உடைத்து கழிவறைக்குள் நுழைந்து உள்ளது. அறையில் இருந்த நான்கு மாணவிகளில் ஒருவரை தவிர மற்ற மூன்று மாணவிகளும் பழங்குடி சமூகத்தினர்தான். ஆனால் குக்கிகள் இல்லை. அவர்கள் இதை வன்முறைக் கூட்டத்திடம் தெரிவித்து தங்களை விட்டுவிடும்படி கெஞ்சி இருக்கிறார்கள். இதற்குள் குக்கி சமூகத்து மாணவி தப்பி மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டாள். மற்ற மூன்று மாணவிகளும் அடையாள அட்டையை காட்டி தாங்கள் வேறு சமூகத்து மாணவிகள் என்று சொன்ன பிறகுதான் வன்முறைக் கும்பல் வெளியேறி இருக்கிறது.
இதன் பிறகு அந்த மாணவி போலிசால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இப்போது அவர் டெல்லியில் தங்கி இருக்கிறார். இன்னும் பயம் அந்த மாணவியைவிட்டுப் போகவில்லை.
இன்னொரு மாணவி.
இவர் விலங்கியல் துறையில் பி.எச்.டி.செய்யும் 29 வயது மாணவி.இவரும் மணிப்பூர் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டார். தனது அன்றாட தேவைக்காக டெல்லியில் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறார். அவர், “தனக்கு ஆராய்ச்சியை மீண்டும் தொடங்குவதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை. வளாகத்திற்குத் திரும்பப் போவதில்லை. வகுப்புவாத உணர்வு மிகவும் வலுவாக உள்ளது, இப்போது நான் திரும்பிச் செல்வது முட்டாள்தனமாக இருக்கும்
எங்கள் வீடு போய்விட்டது. எனக்கு அன்றாட செலவுகளுக்காக பணம் சம்பாதிப்பதே பெரும் போராட்டமாக உள்ளது, இப்போது எனக்கு படிப்பு முக்கியமானதான தெரியவில்லை. நான் விலங்கியல் மாணவி என்பதால், எனது ரிக்காடு நோட்டுகள் பெரிய அளவு கொண்டவை. அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அவை எனக்கு கிடைக்காது” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தில் ஆறு தாக்குதல்கள் கொடூரமானவை என்று மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. அவற்றில் இம்பால் பல்கலைக் கழக விடுதிகளில் நடத்தப் பட்ட தாக்குதலும் ஒன்றாகும்.
00