பிப்ரவரி-03.
தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக உள்ள கல்பனா நாயக் “தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியுள்ள புகாருக்கு டிஜிபி விளக்கம் அளித்து உள்ளார்
காவல் துறைக்கு சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களை தோ்வு செய்யும் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்தவர் கல்பனா நாயக்.
இவர் தாம் அந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முயன்றதை அடுத்து தம்மை கொல்ல சதி நடந்ததாக கூறியுள்ளார். தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் சென்னன எழும்பூரில் உள்ள தமது அலுவலகத்திற்கு கடந்த ஜுலை 29- ஆம் தேதி தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அன்று அலுவலகத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாக சென்றிருந்தால் தாம் உயிரிழந்திருக்க நேரிட்டு இருக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த ஆகஸ்டில் அவர் புகார் அனுப்பிய தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
“ஏடிஜிபியின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரிக்க வேண்டும்”-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதால் தாக்குதல் என புகார் வந்து உள்ளது.
ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதனிடையே கல்பனா நாயக் அலுவலகத்தில் நடந்த தீ விபத்தில் நாசவேலை எதுவும் இல்லை என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
“தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல், மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது. மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது” என்று டிஜிபி தமது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
உண்மை என்னவாக இருக்கும் ?
*