June 08,23
ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையம் அருகே எஞ்சின் இன்றி நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் சில பெட்டிகள் திடீரென உருண்டு அவர்கள் மீது ஓடியதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட தகவல்களின்படி, ரயிலில் இன்ஜின் இல்லை என்றும், அது பாதுகாப்பான ரயில் பாதையில் நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது ரயிலின் நின்றுகொண்டிருந்த பெட்டிகளின்கீழ் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர்கள் ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலைக்கு அருகே ரயில்வே பணிக்காக ஒப்பந்ததாரர் ஒருவரால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இன்று, பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால், நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டிகள் உருண்டது என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து கோர்டா ரோடு கோட்ட ரயில்வே அதிகாரி தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. கோர்டா ரோடு டிஆர்எம், ரிங்கேஷ் ராய் கூறுகையில்,”நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் உயிரிழந்தது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அவர்கள் ரயில் பெட்டிகளுக்கு அடியில் சென்றிருக்கக் கூடாது. யாரும் ரயில் பெட்டிகளுக்கு அடியில் செல்லக்கூடாது. மக்கள் ரயில் பாதைகளைச் சுற்றி வரும்போது அதிக முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
விபத்துக்கு சாத்தியமான காரணம் குறித்து ராய் கூறுகையில், “விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை அறிய நாங்கள் விசாரணை நடத்துவோம். ஆனால் முதல் பார்வையில், யாரோ ஒருவர் பெட்டிகளின் இயக்க ஹேண்ட் பிரேக்குகளை அவிழ்த்துவிட்டதாகத் தெரிகிறது. ரயில் பெட்டிகள் அசையாமல் இருக்க ரயில் பெட்டிகளில் ஹேண்ட் பிரேக்குகள் உள்ளன” என்றார்.
ஜாஜ்பூர் ரயில் நிலைய விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. தொடர்ந்து, யஷ்வந்த்பூர் – ஹவுரா நோக்கி சென்ற ரயில், தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 278 பேர் இறந்தனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ரயில்வே துறை, பிரதமர் மோடி, மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்திருந்தன. 2009ஆம் ஆண்டு இதே இடத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.