செப்டம்பர்,07-
இந்தியா சுதந்தரம் அடைந்த போது நாட்டில் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது.மத்தியிலும் , அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆண்டது.அந்த கட்சியின் சரிவு கேரள மாநிலத்தில் இருந்து தொடங்கியது.
1957 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு, கேரள மாநித்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அதன் பின்னர் நாட்டில் பல்வேறு கட்சிகள் வேர் விட்டன.கம்யூனிஸ்ட்கள் தமிழகம்,ஆந்திரா,மே.வங்காளம்,பீகார் போன்ற மாநிலங்களில் வளர்ந்தார்கள். தமிழகத்தில் திமுக உருவானது. வடக்கே ஜனசங்கம் தழைத்தது.
ஆனாலும் மத்தியில் 77 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியை எந்த கட்சியாலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை.பிரதமர்கள் மாறினார்கள்.ஆனால் காங்கிரஸ் கட்சியே நாடாண்டது.
இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு குழி தோண்டினார்.அதன் பின்னர் 77 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அநேக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனதா என்ற புதிய கட்சியை உருவாக்கின. வெற்றி பெற்றார்கள். காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி இந்தியாவில், அப்போதுதான் உதயமானது. இந்தியாவில் கூட்டணி ஆட்சிக்கான பிள்ளையார் சுழியாக ,ஜனதா ஆட்சி அமைந்தது. அந்த தேர்தலில் இந்திராவே தோற்றுப்போனார்.
வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முகவரி இல்லாமல் போனது.காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார். எனினும் பிரதமர் மொரார்ஜி தேசாய் 2 வருடம் 126 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. கதம்ப கூட்டணியை உருவாக்கி இருந்த தலைவர்களின் ஈகோவால், மொரார்ஜியின் ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜனதா கட்சியில் ஓர் அங்கமாக இருந்த மதசார்பற்ற ஜனதா கட்சியின் தலைவர் சரண்சிங் பிரதமர் ஆனார். இவரது அரசு 170 நாட்கள் மட்டுமே நீடித்தது. 1980 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வென்றது. இந்திரா காந்தி பிரதமர் ஆனார்.
இதன் பின் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. 1989 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தார்.அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.பி. சிங், ராஜீவுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரசில் இருந்து விலகினார். ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இவருடன், திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து தேசிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி அமைத்தன.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. பாஜக, இடதுசாரிகள் உள்ளிடோர் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் ஆனார். பிற்பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்துவதில், வி.பி.சிங் பிடிவாதமாக இருந்ததால், அவரது ஆட்சியை பாஜக, கவிழ்த்தது.
வி.பி.சிங்குக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால்,அவர் 343 நாட்களில் பதவி இழந்தார்.பின்னர் காங்கிரஸ் ஆதரவை பெற்று, சமாஜ்வாதி ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர் பிரதமர் ஆனார். அவரது ஆட்சியை 223 நாட்களில் காங்கிரஸ் கவிழ்த்தது.
இதனால், 1991 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை நாடு சந்தித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமரான நரசிம்மராவ், தனது முழுப் பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக, தனிப்பெரும் கட்சியாக உருவானதால் வாஜ்பாய் பிரதமர் ஆனார்.மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் பதவி இழந்தார்.
இதன் பின்னர், ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி உருவாகி, ஜனதா தளம் தலைவர் தேவகவுடாவுக்கு பிரதமர் யோகம் கிட்டியது. இவர் 324 நாட்கள் பதவியில் இருந்தார்.அவரை தொடர்ந்து , அதே கூட்டணி சார்பில் ஐ.கே.குஜ்ரால் 333 நாட்கள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையில் 13 கட்சிகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) என்ற புதிய கூட்டணியை பாஜக தலைவர் வாஜ்பாய் அமைத்தார். அந்த கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். 13 மாதங்கள் மட்டுமே நீடித்த இவரது ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஒரே ஒரு ஓட்டில் வாஜ்பாய் தோற்றுப்போனார். இதனால் 1999 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் என்டிஏ மீண்டும் வெற்றிபெற்றது. மூன்றாவது முறையாக பிரதமரான வாஜ்பாய் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நீடித்தார்.
காங்கிரசின் செல்வாக்கு குறைந்ததால், அதன் பின்னர் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோடு, தோழமை கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அடுத்தடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றது. இருமுறையும் காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.
2014 ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜகவின் மோடி பிரதமர் ஆனார். கடந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றியது.ஆனாலும் , கூட்டணி கட்சிகளுக்குஅமைச்சரவையில் இடம் கொடுத்தார், மோடி.
இந்த நிலையில் தான் இன்னும் 8 மாதங்களில் மக்களவை தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமையுமா? மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவாரா?எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ’இந்தியா’ கூட்டணி ஜெயிக்குமா?
விடை தெரியாத இந்த வினாக்களுக்கு , வாக்காளர்கள் தான்பதில் சொல்ல முடியும்.
000